ஏழைகளின் "அட்சயபாத்திரம்" அம்மா உணவகங்கள்.!

0 3556

தமிழ்நாட்டில் யாரும் பசியின்றி இருக்கக் கூடாது என்ற நோக்கிலும், ஏழை எளிய உழைக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது தான் அம்மா உணவகங்கள்.

ஒரு ரூபாய்க்கு இட்லி, 2 சப்பாத்தி 3 ரூபாய், 5 ரூபாய் சம்பார் சாதம் என மிக குறைந்த தொகையில் பசியைப் போக்கிக் கொள்ள முடியும் என்ற சூழலில், அற்புதமாக செயல்பட்டு வருகிறது, அம்மா உணவகங்கள்...

காலையில் இட்லி பொங்கல், மதிய வேளையில் சாம்பார் சாதம், லெமன்சாதம், கருவேப்பிலை சாதம், தயிர் சாதம், இரவில் சப்பாத்தி என இந்த அசாதாரண நோய்த்தொற்று சூழலிலும் உணவு வகைகளை குறைக்காமல் , சுகாகாரமாக இங்கு சமைத்து வழங்கப்படுகிறது.

அம்மா உணவகத்தில் மக்கள் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வரையப்பட்டிருந்த கோட்டிற்கு, ஒருவர்பின் ஒருவராக வரிசையில் நின்று உணவுகளை பெற்று உண்டனர், சிலர் பாத்திரங்களிலும் பார்சல் வாங்கிச் சென்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைளாக 144 ஊரடங்கு உத்தரவினால் பல ஹோட்டல்கள் அடைக்கப்பட்டதன் எதிரொலியாக மக்களை அம்மா உணவகங்களை நோக்கி நடைபோட வைத்துள்ளதாகவும் குறிப்பாக கடந்த காலங்களை விட தற்போது விற்பனை அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர், அம்மா உணவக பணியாளர்கள்....

கொரோனா தொற்று அபாயம் உள்ளதினால் உணவகங்களின் வெளிப்புறத்தில் மாநகராட்சி பணியாளர்களால் அவ்வப்போது கிருமிநாசினி தெளிக்கப்படுகின்றன.

அதே போல் , உணவகத்தின் உட்புறங்களிலும் காலை மாலை என சுத்தம் செய்வதாகவும் , உணவு சமைக்கும் பாத்திரங்களையும் சாப்பிடும் தட்டுகளையும் சுத்தமாக பராமரிப்பதாக கூறுகின்றனர், அம்மா உணவகப் பணியாளர்கள்...

ராயப்பேட்டை அம்மா உணவகத்திற்கு வருபவர்களுக்கு எல்லாம் உணவுக்கான கட்டணத்தை தானே செலுத்திக்கொண்டிருந்த தன்னார்வலர் தேவகுமார் என்பவர், அவர்களுக்கு சானிடைசர் வழங்கி கைகழுவ வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

நடமாடும் அம்மா உணவகத்தை சென்னை மாநகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்படுத்தினால் , உணவகம் வந்து உணவு உண்ண வாய்ப்பில்லாத முதியவர்கள் , உடலநலம் குறைந்தவர்களது பசியும் தீரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments